Photo: Twitter/ICC
டி-20 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வனிந்து ஹஸரங்க ஹெட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
டி-20 உலகக் கிண்ணத் தொடரில் சனிக்கிழமை நடைபெற்ற 25 ஆவது லீக் போட்டியில் இலங்கையை 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாபிரிக்க அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 142 ஓட்டங்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து, 143 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்க அணி களமிறங்கியது.
இதில் 15 ஆவது ஓவரை, இலங்கை அணியின் வனிந்து ஹஸரங்க வீசினார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில், எய்டம் மார்க்ரம் போல்ட் ஆகி வெளியேறினார்.
பின்னர், ஹஸரங்க 18 ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே தென்னாபிரிக்க அணித்தலைவர் டெம்பா பவுமா பிடிகொடுத்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டுவைன் பிரிடோரியஸ், அடுத்த பந்திலேயே டக்-அவுட் ஆகி வெளியேறினார்.
இதன்மூலம், இம்முறை டி-20 உலகக் கிண்ணத்தில் ஹெட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது வீரராக வனிந்து ஹஸரங்க இடம்பிடித்தார்.
முன்னதாக அபுதாபியில் நடைபெற்ற நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், அயர்லாந்து அணியின் கர்ட்டிஸ் கேம்ப்பர் ஹெட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
அதேபோல, டி-20 உலகக் கிண்ணத்தில் பிரெட் லீ, கர்ட்டிஸ் கேப்பருக்குப் பிறகு ஹெட்ரிக் விக்கெட் எடுத்த மூன்றாவது வீரராக வனிந்து ஹஸரங்க சாதனை படைத்தார்.
இதற்கிடையில், அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ மற்றும் இலங்கையின் திசர பெரேரா மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் சர்வதேச ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஹெட்ரிக் விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.
அந்த வகையில், ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளில் ஹெட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி ப்ரெட் லீ, திசா, மாலிங்க வரிசையில் 4 ஆவது வீரராக வனிந்து ஹஸரங்கவும் இணைந்துள்ளார்.
24 வயதான லெக்-பிரேக் சுழல்பந்துவீச்சாளராக வனிந்து ஹஸரங்க, 2017இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தனது அறிமுக ஒருநாள் போட்டியிலும் ஹெட்ரிக் விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.