பாலியல் கடத்தல் கும்பலினால் கடத்தி வரப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஐந்து இந்தோனேசியப் பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்கிசையில் விடுதியொன்று சோதனையிடப்பட்ட போதே பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.
பாலியல் கடத்தல் கும்பலால் பாதிக்கப்பட்ட குறித்த பெண்கள், நட்சத்திர வகுப்பு சர்வதேச ஹோட்டல்களில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து தாம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், பெண்கள் நாட்டிற்கு வந்தவுடன், அவர்களின் கடவுச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, தெஹிவளை மற்றும் கல்கிசையில் அமைந்துள்ள விபசார விடுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் கல்கிசை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் பாலியல் கடத்தலுக்கு உள்ளாகிய போதிலும், விபச்சார கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விபச்சார விடுதியின் நிர்வாகத்திற்கோ அல்லது வதிவிட விசா அனுசரணையாளர்களுக்கு எதிராகவோ பொலிஸாரினால் எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை.
பல இலங்கை தீர்ப்புகள் இலங்கையில் பாலியல் தொழிலை சட்டவிரோதமானது அல்ல என்று கூறியுள்ளது. விபச்சார விடுதியை நிர்வகிப்பது மட்டுமே சட்டவிரோதமானது என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் பாலியல் கடத்தல் குற்றமாகும். குற்றவியல் சட்டத்தின் 360C பிரிவு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் கடத்தலை குற்றமாக்குகிறது.இதன்படி கைது செய்யப்பட்ட பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களின் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.