புதிய கொவிட் வைரஸ் வகையான A. 30 வைரஸ் தொடர்பில் இலங்கை அவதானமாக இருப்பதாக மருந்து விநியோகம் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
‘பைசர்’ மற்றும் ‘அஸ்ட்ரா செனெகா’ உட்பட அனைத்து கொவிட் தடுப்பூசிகளினதும் செயற்திறனை தோற்கடிக்க கூடிய இந்த வைரஸ் குறித்து உலகம் முழுவதும் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த மாறுபாடு பரவினால் பெரும் பிரச்சினை ஏற்படும் என வலியுறுத்திய அவர், கொவிட் பரவல் முடிந்து விட்டது என நினைத்து மக்கள் செயல்பட்டால் இன்னும் நான்கு வாரங்களில் மோசமான விளைவுகள் வெளிப்படும் என குறிப்பிட்டார்.
இதனிடையே, திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் சுகாதார ஆலோசனைகளை மக்கள் புறக்கணித்தால், கொவிட் தொற்று பரவல் வேகமாக அதிகரிக்கும் என பேராசிரியர் சன்ன ஜெயசுமன மேலும் சுட்டிக்காட்டினார்.
ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் குழு, பிரிட்டிஷ் வாராந்திர அறிவியல் இதழான ‘நேச்சரில்’ வெளியிடப்பட்ட ஆய்வில், A.30 மாறுபாடு ஒருவேளை தான்சானியாவில் தோன்றியிருக்கலாம் என ஊகங்களை வெளியிட்டது.
இருப்பினும், இந்த மாறுபாடு ஏற்கனவே அழிந்து விட்டது எனவும் இது தொடர்பில் அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில் இந்த மாறுபாட்டின் ஒரு சில வழக்குகள் மட்டுமே உலகில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஐந்து மாதங்களில் இந்த மாறுபாடு தொற்று உலகில் பதிவாகவில்லை.