January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சினிமா பாணியில் குடும்பஸ்தரை கடத்திச் சென்று 10 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற மூவர் கைது!

பொலிஸ் அதிகாரிகள் எனத் தெரிவித்து குடும்பஸ்தர் ஒருவரைக் கடத்திச் சென்று சுமார் 10 இலட்சம் ரூபாவை  கப்பமாக பெற்றுக் கொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் கொழும்பு, கிராண்ட்பாஸ் மோலவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள், கடத்தப்பட்டவரது வீட்டின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி கப்பம் கோரியுள்ளதுடன், இவ்விடயத்தை பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டாம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

அதற்கமைய கடத்தப்பட்டவரின் மனைவியால் தனியார் வங்கியொன்றில் 10 இலட்சம் ரூபாய் வைப்பிலிடப்பட்டதையடுத்து கடத்தப்பட்டவர் மாபொல பிரதேசத்தில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்டவரின் குடும்பத்தாருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை.

எனினும், நேற்று (29) இவ்விடயம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட பற்றுச்சீட்டு, தொலைபேசி இலக்கம் என்பவற்றை வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.