November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். பல்கலைக்கழகத்தில் 6 பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாக பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழக பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று (30) துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது பேராசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்து மதிப்பீடுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தகுதி பெற்ற 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களின் விபரங்கள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நடைமுறைகளுக்கமைய அந்தந்த விண்ணப்ப தினங்களில் இருந்து பேராசிரியர்களின் பதவி உயர்வை பேரவை அங்கீகரித்துள்ளது.

அதன்படி, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து சத்திர சிகிச்சை துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணருமான வைத்திய கலாநிதி சி. ராஜேந்திரா, சத்திர சிகிச்சையில் பேராசிரியராகவும், மருத்துவத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணருமான வைத்திய கலாநிதி என். சுகந்தன், மருத்துவப் பேராசிரியராகவும், மகப்பேற்றியல் மற்றும் பெண் நோயியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றியல் மற்றும் பெண் நோயியல் நிபுணருமான வைத்திய கலாநிதி கே. முகுந்தன், மகப்பேற்றியல் மற்றும் பெண் நோயியல் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்படுவதற்கு  பேரவை ஒப்புதலளித்துள்ளது.

இவர்களுடன், கலைப் பீடத்தில் இருந்து, பீடாதிபதியும், புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி கே. சுதாகர், தமிழ்த் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி (செல்வி) எஸ்.சிவசுப்ரமணியம், பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.விஜயகுமார் ஆகியோரை முறையே புவியியல், தமிழ், பொருளியல் துறைகளில் பேராசிரியர்களாக பதவி உயர்த்துவதற்கும் பேரவை ஒப்புதலளித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரே தடவையில் அதிக எண்ணிக்கையான பேராசிரியர்  உயர்வு வழங்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.