காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள ஐநா மனித உரிமைகள் அலுவலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் தமது பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அவர்கள் ‘இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், இந்த அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை, சர்வதேசமே! நமக்கு தீர்வை கொடு’ போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாம் நடத்தும் போராட்டங்களுக்கு புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் இருப்பதாக யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளை பெற்று தாருங்கள் என கோரியே தாம் போராட்டங்களை மேற்கொள்வதாகவும் போராட்டங்கள் நடத்தப்படும் போது புலனாய்வாளர்கள் ஏன் அச்சுறுத்தும் விதமாக செயற்படுகின்றார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.