November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சிறுபான்மையினருக்கான உரிமை விடயத்தில் நியூசிலாந்து இலங்கைக்கு முன்மாதிரி’: சாணக்கியன் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும், இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லட்டனுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் நாட்டின் அரசியல் நிலைமைகள் பற்றியும் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் கலந்துரையாடியதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

“நியூசிலாந்து நாடானது எமது நாட்டைப் போன்றே அங்கும் சிறுபான்மை மற்றும் ஆதி குடியிருப்புக்களை கொண்ட நாடாகும் ஆனால் அங்கு அவர்களுக்கு உரிய சம உரிமை அந்நாட்டு பிரதமரினால் வழங்கப்படுகின்றது. அந்நாட்டு பிரதமர் எம்மைப் போன்ற நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்கின்றார்.

மேற்கொண்டு மிக முக்கியமாக எமது நாட்டின் அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்லும் உல்லாசத்துறை, தொழில்நுட்பத்துறை போன்றவற்றின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றியும் மற்றும் சூரிய ஒளி மூலமான சக்தியினை எதிர்காலத்தில் எவ்வாறு வினைத்திறனாக உபயோகிப்பது என்பது பற்றியும் கலந்துரையாடி இருந்தேன்.

அத்துடன் எமது பிரதேசங்களில் காணப்படும் காணி அபகரிப்பு மற்றும் வளச் சுரண்டல்கள் பற்றியும் அதிலும் குறிப்பாக சட்டவிரோத மண் அகழ்வு பற்றிய தொகுக்கப்பட்ட ஆவணம் ஒன்றையும் சமர்ப்பித்ததோடு, அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய அழுத்தங்களை அரசுக்கு வழங்குமாறு கோரியிருந்தேன்”

என்று சாணக்கியன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் என சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.