கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற கொவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், சிற்றுண்டிச்சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களுக்குச் செல்லும் போது, தடுப்பூசி அட்டையைக் கட்டாயம் எடுத்துச் செல்வதற்கான இயலுமை தொடர்பில் ஆராய்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க, கொரோனா சட்டதிட்டங்களில் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளதென்று சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அதிகாரிகள், இது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை கொவிட் மரணங்களின் வீதம் மற்றும் தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ள, தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்துக்கு நடமாடும் சேவையை முன்னெடுக்குமாறும் அனைத்து மக்களும் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறும், ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், தடுப்பூசி ஏற்றல் தொடர்பில் சில குழுவினர் முன்னெடுத்துவரும் போலிப் பிரசாரங்கள் தொடர்பில், மாகாண சுகாதாரப் பணிப்பாளர்களால் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி தொடர்பில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஒருங்கிணைக்கப்பட்ட குழுக்கள் தொடர்பில் உடன் கண்டறியுமாறு, இதன்போது பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.