October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஒரு நாடு ஒரு சட்டம்’ செயலணியை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெற வேண்டும்; சிவாஜிலிங்கம் தெரிவிப்பு

ஒரு நாடு ஒரு சட்டம் என்று கூறும் குழுவை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெற வேண்டுமென தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

இலங்கையினுடைய ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒரு நாடு ஒரு சட்டமொன்றை அமுல்படுத்துவதற்கான ஒரு குழுவை நியமித்து அதிலே வணக்கத்துக்குரிய ஞானசார தேரரை தலைவராக நியமித்திருக்கிறார்.

ஞானசார தேரர் ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு காரணமாக தண்டிக்கப்பட்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு வெளியில் வந்தவர்.எத்தனையோ சர்ச்சைகளில் சிக்கியவர்.அப்படிப்பட்ட ஒருவரை ஒரு நாடு ஒரு சட்டம் என்கிற செயலணிக்கு நியமித்துள்ளார்.

அதிலே பெயருக்கு கூட ஒரு தமிழர் இல்லை. அப்படி என்றால் இந்த நாடு தமிழர்களுக்கு சொந்தம் இல்லையா?, இந்த நாட்டிலே தமிழர்களுக்கு வாழ்வதற்கான உரிமை இல்லையா, அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லை என்று சொல்கிறீர்களா என்று ஜனாதிபதியை நாங்கள் கேட்கின்றோம்.

நாங்கள் இந்த செயலணி மூலம் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லை என்று அறிவிக்க என்ன தடை இருக்கிறது. தனிநாட்டை உருவாக்கி செல்லுங்கள் என்றால் அதற்கும் நாங்கள் ஆயத்தமாகவே இருக்கின்றோம்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்று கூறும் முறையை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெற வேண்டும்.இந்த குழுவைக் கலைக்க வேண்டும். புதிய அரசியலமைப்பை உருவாக்க முன்னரே இவ்வாறான அவசரமான வேலைகளை ஏன் செய்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.