November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”சட்டத்தை மதிக்காதவர் சட்டம் சம்பந்தமான செயலணிக்கு தலைவரா?”: சாணக்கியன் கேள்வி

‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்னும் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்கள் பாரிய விளைவுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள இரா.சாணக்கியன் இந்த விடயம் தொடர்பில் தனது விமர்சனங்களை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு வேண்டப்பட்டவர்கள், தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு ஒரு சட்டமும், வடகிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமும் என்ற நிலைப்பாடில்லாமல் ஒரு சட்டத்தினை அமுல்படுத்துங்கள் என்றே நாங்கள் கூறுகின்றோம் என்று சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

அதனைவிடுத்து புதிதாக ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயணியை உருவாக்குவதன் மூலம் இலங்கை நாட்டின் சட்டத்தினை மதிக்காத ஒருவரை ஜனாதிபதியாக கொண்டுவந்துள்ளனர். இந்த சட்டத்திற்கு எதிரான எங்களது கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் இதன் ஊடாக தமிழ் பேசும் மக்கள் பாரிய விளைவுகளுக்கு முகம்கொடுக்கும் நிலையுருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடிவருகின்ற நிலைகாணப்படுகின்றது. இன்னும் இரண்டு வருடத்தில் இந்த நாட்டில் பசியினால் மக்கள் உயிரிழக்கும் நிலையேற்படும்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் மக்களை திசைதிருப்புவதற்காக போலியான விடயங்களை செய்யாமல், நாட்டு மக்களின் நலனுக்காக செயற்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.