July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு; வீட்டு சூழலை பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வீட்டு சூழலை பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி நுளம்புகள் பெருகும் இடங்கள் இருப்பின் அந்த வீடுகளில் இருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் உப தலைவர் எச்.ஏ.யு.பி.குலதிலக தெரிவித்தார்.

இதனிடையே கடந்த 26 நாட்களில் 2,228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இதில் அதிகமான தொற்றாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக குறித்த பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த மாதம் கொழும்பு மாவட்டத்தில் 856 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 476 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 209 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையின் டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் 2 வாட்டுகளிலும் நோயாளர்கள் நிரம்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஷிரந்தி செனவிரத்ன தெரிவித்தார்.