
வெற்றிடமாகியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு பி.எஸ்.எம்.சார்ள்ஸையும், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு சுந்தரம் அருமைநாயகத்தையும் நியமிப்பதற்கு பாராளுமன்ற பேரவை தனது இணக்கப்பாட்டை வழங்கியுள்ளது.
குறித்த பதவிகளுக்கு இவர்களை நியமிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அந்தப் பரிந்துரைகள் தொடர்பில் ஆராயும் வகையில், சபாநாயகர் மகிந்த யாப்பா தலைமையில் நேற்று கூடிய பாராளுமன்ற பேரவை அதற்கு தனது இணக்கப்பாட்டை வழங்கியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து தற்போதைய வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, விலகியதைத் தொடர்ந்து அந்தப் பதவி வெற்றிடமாகியது. அத்துடன் பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினராக இருந்த வி.சிவஞானசோதி காலமானதை தொடர்ந்து அந்தப் பதவியும் வெற்றிடமாகியது.
இதன்படி குறித்த பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்காக குறிப்பிட்ட நபர்களின் பெயர்களை ஜனாதிபதி பரிந்துரைத்திருந்தார்.
இந்த பரிந்துரைக்கமைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இதற்கு முன்னர் வடமாகாண ஆளுநராகக் கடமையாற்றியிருந்தார். இது தவிரவும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளராகவும், சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியிருந்தார்.
அத்துடன் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள சுந்தரம் அருமைநாயகம், இதற்கு முன்னர் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.