January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இவ்வருடத்தில் 27 பில்லியன் ரூபா மதுவரி வருவாயை அரசாங்கம் இழந்துள்ளது; கோபா குழுவில் தெரிய வந்தது

நாட்டில் நிலவும் கொவிட் சூழல் காரணமாக இவ்வருடத்தில் அரசாங்கம் 27 பில்லியன் ரூபா மதுவரி வருவாயை இழந்திருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி அண்மையில் நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரிவித்தார்.

மதுவரித் திணைக்களத்தினால் இவ்வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 160 பில்லியன் ரூபாவாக இருக்கின்றபோதும், இந்த இலக்கை எட்டுவது சிரமமாக இருக்கும் என்றும் பணிப்பாளர் நாயகம் குழு முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.

மதுவரித் திணைக்களம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட் 2019 ஆம் ஆண்டுக்கான அறிக்கை மற்றும் அத்திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்ந்து பார்க்கும் நோக்கில் கடந்த 22 ஆம் திகதி கோபா குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் அக்குழு கூடியபோதே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் இறைவரித் திணைக்களம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் கணினிக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கோபா குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டிருந்தபோதும், இது இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பிலும் குழுவில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், திணைக்களத்தில் மதுவரி வருவாயை கணக்கிடும் முறையை சரிசெய்வதற்கான கணினி மென்பொருள் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை குழு வலியுறுத்தியதுடன், 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான வரவு – செலவுத் திட்டங்கள் மற்றும் குறை நிரப்பிகள் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதற்கமைய திணைக்களத்துக்கு சொந்தமான சகல நிறுவனங்களையும் உள்ளடக்கியதாக விரைவில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.

இதுவரை கணினி கட்டமைப்பொன்றை உருவாக்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குழுவில் தெரிவித்தார். இந்தக் கணினிக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான கால அட்டவணையுடன் கூடிய திட்டமொன்றை நவம்பர் 5 ஆம் திகதிக்கு முன்னர் விரைவில் கோபா குழுவுக்கு அனுப்பி வைக்குமாறு பணிப்பாளர் நாயகத்துக்கு இங்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.