இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாமாவுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் பிரியாவிடை மதியபோசன விருந்துபசாரமளித்தார்.
இலங்கை – ஜப்பான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண, இலங்கைக்கான பிரதி ஜப்பானிய தூதுவர் கட்சுஹி கட்டாரோ, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்கு ஜப்பானிய தூதுவர் சுகியாமா தனது பதவிக்காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு சபாநாயகர் நன்றியைத் தெரிவித்தார். இக்கட்டான சூழ்நிலைகளில் இலங்கைக்கு ஆதரவாக நின்ற ஜப்பானிய அரசாங்கத்துக்கும், அந்நாட்டு மக்களுக்கும் சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் வலியுறுத்திய வைத்திய கலாநிதி பத்திரன, கொவிட்-19 மூன்றாவது அலைத் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஜப்பான் அரசாங்கம் அஸ்ராசெனிகா தடுப்பூசிகளை வழங்கி ஒத்துழைத்தமையை பாராட்டினார்.
தனது பதவிக்காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்துக்கு நன்றி தெரிவிப்பதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாமா சுட்டிக்காட்டினார். இலங்கை போன்ற மிகவும் அழகான நாட்டுடன் இணைந்து செயற்படக் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து அடுத்த வருடத்துடன் 70 வருடங்கள் பூர்த்தியடைவதையும் அவர் இங்கு நினைவுபடுத்தினார்.