November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளாவிட்டால் புதிய சட்டங்களை உருவாக்க நேரிடும்!

vaccination New Image

தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள மக்கள் முன்வராவிட்டால் எதிர்காலத்தில் புதிய சட்டங்களை இயற்ற வேண்டியிருக்கும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து  தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ஒருவருக்கு தனது உயிர் மீது உரிமை இருந்த போதிலும் இன்னொருவரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த உரிமை இல்லை. எனவே அவ்வாறான நிலைமை ஏற்படுமானால் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் நடவடிக்கை எடுப்போம் என அவர் குறிப்பிட்டார்.

தற்போது பிரித்தானியாவில் முழுமையாக கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களில் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போன்று ஒரு சட்டத்தை நாட்டில் அமுல்படுத்த வேண்டி ஏற்படலாம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

நாட்டில் கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், மக்கள் இன்னும் சரியான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன,சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக மக்கள் முகக் கவசங்களை கழுத்தில் அணிவது மற்றும் பேசும் போது முகக் கவசத்தை அகற்றிவிட்டு பேசுவது என்பன கவனிக்கத்தக்கவை. வைரஸ் இன்னமும் அழிவடையவில்லை.நாட்டில் தினமும் 500 க்கும் அதிக நோயாளர்களை அடையாளம் காணப்பட்ட காலகட்டத்தை நாம் கடந்து வந்துள்ளோம்.

டெல்டா வைரஸ் காலகட்டத்திற்கு பிறகு நாம் இன்று முன்னேற்றமான நிலைக்கு வந்துவிட்டோம். அதை நாம் பாதுகாக்காவிட்டால், மீண்டும் கட்டுப்பாடுகளுக்கு செல்வதை தவிர்க்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

“அவ்வாறான நிலை ஏற்பட்டால், சுகாதார அதிகாரிகளையும் பாதுகாப்பு பிரிவினரையும் வசைபாட வேண்டாம். நாங்கள் எங்களால் முடிந்தவற்றை செய்துள்ளோம். ஒன்றரை ஆண்டுகளில் எங்களால் முடிந்ததை செய்துள்ளோம்” எனவும் அவர் வலியுறுத்தினார்.