சீனா இலங்கையின் நட்பு நாடு என்பதற்காக அங்கிருந்து தரம் குறைந்த உரத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்றில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வாராந்த அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து வரும் உரத்தைத் தவிர்த்து, இந்தியாவிடம் இருந்து உரத்தைக் கொள்வனவு செய்வது, இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தைக் காட்டுகிறதா? என்று ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலளித்த அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண, ‘சீனா தொடர்பான இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றமில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘அனைத்து நாடுகளுடனும் நட்பு, எந்தவொரு நாட்டுடனும் விரோதம் இல்லை’ எனும் அணிசேரா கொள்கையை இலங்கை கடைபிடித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவில் இருந்து இலக்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உரம் தரக் குறைவாக இருந்ததால் அரசாங்கம் அதனை இடைநிறுத்தியதாகவும், அதுதொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை சீன அரசாங்கத்துக்கு தெளிவாக விளக்க முடியும் என்றும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.