
இலங்கை முன்னாள் பாதுகாப்புப் பணியாளர் சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இராணுவ வீரர்களை நினைவுகூரும் ‘பொப்பி மலர்’ தின நிகழ்வின் முதலாவது பொப்பி மலர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அணிவிக்கப்பட்டது.
இன்றைய தினம் ஜனாதிபதி அலுவலகத்தில், இலங்கை முன்னாள் பாதுகாப்புப் பணியாளர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உப்புல் பெரேராவினால் ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
பொப்பி மலர் விற்பனையின் மூலம் பெறப்படும் நிதி, பாதுகாப்புப் படையினரின் ஓய்வூதியம் மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் நலன்புரி சேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இலங்கையில் பொப்பி மலர் தினம் முதாவதாக 1944 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், அது 77 வருடங்களாக தொடர்கின்றது.
முதலாவது மற்றும் இரண்டாவது உலகப் போர்களிலும், கடந்த முப்பது வருட காலமாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போதும் உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவு கூர்ந்து, 2021 ஆம் ஆண்டுக்கான பொப்பி மலர் தின நிகழ்வு, நவம்பர் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் உலக இராணுவ வீரர் நினைவுத்தூபிக்கு அருகில் நடைபெறவுள்ளது.
அதேநேரம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதியன்று உலகின் பல்வேறு நாடுகளில் பொப்பி மலர் தினம் நினைவுகூரப்படுவதோடு, இலங்கையிலும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு அண்மையில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையில் நினைவுகூரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.