சீனாவில் இருந்து வரும் தரமற்ற உரத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அனுப்பப்பட்ட சேதன உரத்தில் நச்சு பெக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சீனாவின் சேதன உர நிறுவனத்திற்கு வணிக மேல் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.
இதன்படி அந்த உரத்துடன் வரும் கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதிப்பதில்லை என்று துறைமுக அதிகாரசபை தீர்மானம் மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் குறித்த கப்பல் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அது தொடர்பில் ஊடவியலாளர்களினால் கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதன்போது பதிலளித்த அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன, ”அந்தக் கப்பல் துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்படாது என்று, துறைமுக அதிகார சபை தலைவர் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும் அரசாங்கம் தரமற்ற உரத்தை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை என்பதனை பொறுப்புடன் நாங்கள் கூறிக்கொள்கின்றோம்” என்றார்.