இந்தியாவின் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
கெளதம் அதானியும் அவரின் குடும்பத்தின் சிலரும், இரண்டு தனியார் விமானங்களில் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
கடந்த 7 ஆம் திகதி போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்ட இந்தியாவின் செல்வந்த வர்த்தகர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கௌதம் அதானி உள்ளார்.
துறைமுகம், எரிசக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டம் தொடர்பில் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் கௌதம் அதானி கலந்துரையாடவுள்ளதாக ‘த ஹிந்து செய்தி’ வெளியிட்டுள்ளது.
அவர், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, இந்திய வர்த்தகர்கள் சிலர் இன்று (25) மாலை மன்னாருக்கு சென்றுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் சஞ்சய மொஹொட்டால ஆகியோரும் அவர்களுடன் அங்கு சென்றிருந்தனர்.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்கை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.