May 29, 2025 10:38:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நாம் என்ன எடுப்பார் கைப்பிள்ளைகளா?”: முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. கேள்வி

இலங்கை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நிறைவேறுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவைப்பட்டிருந்த நிலையில், எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி.க்கள் நால்வர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவரைத் தவிர ஏனைய எம்.பி.க்கள் அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம் கோரப்படும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது.

இந்நிலையில், 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமைக்கான காரணங்கள் குறித்து முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தன்னிலை விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பொன்றை இன்று நடத்தினார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக கல்முனை மாநகரை எம்மில் இருந்து பறிக்க முற்பட்டது. வடக்கு-கிழக்கில் உள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசாங்கம், சர்வதேசத்துடன் நல்லுறவினை பேணி வருகின்றனர்.

ஆனால் எமது மக்களுக்காக நாம் ஒரு நடவடிக்கை எடுக்கின்ற போது கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு எதிராக போராட வேண்டும் என்கின்றனர்.

அல்லாவிட்டால், எங்களை துரோகிகள் என சுமந்திரன் அறிக்கை விடுகின்றார். நாங்கள் என்ன எடுப்பார் கைப்பிள்ளைகளா” என்று கூறினார் ஹரீஸ் எம்.பி.