September 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இரசாயன உரம் வேண்டும்”: மன்னாரில் விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் உரப் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மன்னாரில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 விவசாய அமைப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த பேரணி நடத்தப்பட்டது.

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் உயிலங்குளம் சந்தியில் இன்று முற்பகல் 9.30 மணியளவில் ஆரம்பமான பேரணி உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையம் வரை இடம்பெற்றது.

இந்தப் பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வினோநோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபை முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி, உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது அரசின் திட்டமிடாத நடவடிக்கையை கண்டித்து விவசாயிகள் கோசம் எழுப்பியதோடு, அரசாங்கம் உடனடியாக இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையத்திற்கு முன்னால், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் வந்த நிலையில், அவரிடம் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய மகஜர் ஒன்று விவசாய அமைப்புகளினால் கையளிக்கப்பட்டது.

இதன் போது குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர், அதனை ஜனாதிபதிக்கு உடனடியாக கையளிப்பதாக கூறியுள்ளார்.

This slideshow requires JavaScript.