File Photo
சர்வதேச கடற்பரப்பில் காணாமல் போயிருந்த இலங்கை மீனவர்கள் 4 பேர் இந்தியக் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்ட, குறித்த நான்கு மீனவர்களும் அந்தமான் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்ககொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஏழு நாட்கள் கடலில் மீன்பிடிக்கும் ஏற்பாடுகளுடன் குறித்த நான்கு மீனவர்களும் கடலுக்குச் சென்றிருந்தனர்.
எனினும் திட்டமிட்டபடி குறித்த நாட்களுக்குள் மீனவர்கள் கரை திரும்பாத நிலையில், சம்மந்தப்பட்ட உறவினர்களினால் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இவ்விடயத்தில் கவனம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணித்ததுடன், இலங்கை மற்றும் இந்திய கடற் பாதுகாப்பு தரப்பினருக்கும் தகவலை தெரியப்படுத்தி ஒத்துழைப்பினை கோரியிருந்த நிலையில், தற்போது நான்கு கடற்றொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.