
அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் இருக்குமாக இருந்தால் அதனை உள்ளேயே தீர்த்துக்கொள்ளுங்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற ஆளுங்கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், விவசாயிகளின் உரம் தொடர்பான பிரச்சனை உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதேவேளை அரசாங்கத்திற்குள் சில தரப்பினருக்கிடையே நிலவும் கருத்து மோதல்கள் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது, ஏதேனும் பிரச்சனைகள் இருக்குமாயின் அது தொடர்பில் வெளியில் விமர்சனங்களை முன்வைக்காது, உள்ளேயே அவற்றை தீர்த்துக்கொண்டு ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியதாக அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.