சம்பள முரண்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி முன்னெடுத்து வரும் போராட்டத்தை வேறுவிதமாக தொடர்வதற்கு இலங்கை அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதன்படி ஒக்டோபர் 25 முதல் பாடசாலைகளுக்கு சென்று கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டாலும், அதனைத் தவிர பாடசாலைகளில் வேறு எந்தப் பணிகளிலும் ஈடுபடாது இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முற்பகல் 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும் மாணவர்களுக்கு கற்பிக்கும் நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபடுவோம் என்று அதிபர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டணி தெரிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ பாடசாலையின் வேலைத்திட்டங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் கல்வி அலுவலங்களின் ஆவணங்கள் தொடர்பான பணிகள் உள்ளிட்ட எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என்று அந்தக் கூட்டணி தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரையில் இவ்வாறு தமது போராட்டத்தை தொடருவோம் என்று அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் கூட்டணி அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதேவேளை ஒக்டோபர் 25 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் அதிபர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டணி தீர்மானித்துள்ளது.