தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா, இராகலை நகரில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இராகலை – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமாகி இராகலை முருகன் ஆலயம் வரை சென்றது.
இந்தப் போராட்டத்திற்கு இராகலை வர்த்தகர்கள் கடைகளை மூடி ஆதரவு வழங்கினர்.
இதன்போது உரையாற்றிய இராதாகிருஷ்ணனன் எம்.பி, விரைவில் இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவோம் என்றும் அதுவரை ஓயமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று எதை கேட்டாலும் விலையேற்றம், தட்டுப்பாடு என்ற வார்த்தைகளே வெளிவருகின்றது. இதன்படி இந்த தீபாவளி தமிழர்களுக்கு ஒரு கறுப்பு தீபாவளியாக அமைய போகின்றது என்றும் அவர் கூறினார்.
இந்த அர்ப்பாட்டப் பேரணியில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.