
இந்தியாவிலிருந்து பசளைக் கொள்வனவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் தன்னைப் பற்றி முன்வைக்கப்படும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து பசளைக் கொள்வனவு செய்வதற்காக அரச வங்கி ஒன்றில் தனிப்பட்ட கணக்கொன்றை ஆரம்பித்தல் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் முன்வைத்த கருத்தை மேற்கோள்காட்டி, ஒருசில ஊடகங்கள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் பி.பீ.ஜயசுந்திரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,”அந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது மற்றும் உண்மைக்குப் புறம்பான வகையில் உருவாக்கப்பட்டதாகும். அரச வங்கியொன்றில் கணக்கொன்றை ஆரம்பித்தல் என்பது, குறித்த வங்கிக்கும் கணக்கு உரிமையாளருக்கும் இடையிலான செயற்பாடாகும். இதில், உரிய விதிமுறைகளுக்கமைய செயற்படுவது வங்கியின் பொறுப்பாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
”பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் முன்வைத்த கருத்தை மேற்கோள்காட்டி தன்னை இலக்கு வைத்து திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொய்ப் பிரச்சாரம் தொடர்பாக, ஏற்கனவே கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் ஜனாதிபதியின் செயலாளர் அந்த அறிக்கையில் குறிப்பிடடுள்ளார்.