இலங்கையில் மத வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலானோருக்கு கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வழிபாட்டுத்தலங்களில் ஒரே நேரத்தில் 50 பேர் வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்ற தினத்திற்கு மாத்திரமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய நாட்களில் வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கொரோனா தொற்று மீண்டும் பரவாதிருக்கும் வகையில் செயற்படுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டில் தொடர்ந்தும் நாளொன்றில் சுமார் 500 கொரோனா நோயாளர்கள் பதிவாவதையும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, திறந்த வெளிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் 75 பேர் கலந்துகொள்வதற்கும் குளிரூட்டப்பட்ட அறைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் 75 பேர் கலந்துகொள்வதற்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கொரோனா தொற்று அபாயம் நாட்டில் தொடர்வதால், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படுமாறு வைத்தியர் அசேல குணவர்தன பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.