
கொரவலப்பிட்டி அனல் மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் தீர்மானத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்துவதற்கு பெட்ரோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை மற்றும் துறைமுக அதிகார சபை தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
எவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதனை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக் கூறியுள்ள மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணி ஏற்பட்டாளர் ரஞ்சன் ஜயலால், பெட்ரோலிய, துறைமுக மற்றும் மின்சார சபை ஊழியர் சங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அனல் மின்நிலைய விடயம் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரவலப்பிட்டியவிலுள்ள ‘யுகதனவி’ அனல் மின்நிலையத்தின் 40 வீத பங்குகளையும் மற்றும் அதன் எரிபொருள் கட்டமைப்பையும் அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் ஒப்பந்தங்கள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை நிலைமையை தொடர்ந்தே தொழிற்சங்கங்கள் இவ்வாறாக போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளன.