January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியாவுடனான உரக் கொள்வனவு குறித்து போலிச் செய்தி’: விசாரணைக்கு பணிப்பு

இந்தியாவுடனான உரக் கொள்வனவு குறித்து போலிச் செய்தி பரப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகை ஒன்றில் இதுதொடர்பாக வெளியான செய்தியை அனைத்துத் தரப்பினரையும் அழைத்து விரிவான விசாரணை நடத்தும்படி ஜனாதிபதியின் செயலாளர் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

“இந்திய உர வகைகளுக்கு வழங்குவதற்காகத் தனிப்பட்ட கணக்கில் 29 கோடி ரூபாய் வைப்பு- ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர தலையீடு” என்ற தலைப்பில் அருண பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும் வெறுக்கத்தக்கது என்று ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த குற்றச்சாட்டை தான் முழுமையாக மறுப்பதாகவும் பி.பீ.ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செய்தி தொடர்பாக அனைத்துத் தரப்பினரையும் அழைத்து முறையானதும் விரிவானதுமான விசாரணையொன்றை உடனடியாக நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.