கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கொழும்பில் மேலும் சில பிரதேசங்களில் இன்று மாலை 6 முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக கொவிட் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
ஏற்கனவே கொழுப்பில் 14 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் நேற்று இரவு புறக்கோட்டை குணசிங்கபுர பிரதேசத்தில் 70 ற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கை மற்றைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் 33 பொலிஸ் அதிகாரப் பிரதேசங்களிலும், குருநாகல் மாவட்டத்தில் 5 பொலிஸ் அதிகாரப் பிரதேசங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் 3 பொலிஸ் அதிகாரப் பிரதேசங்களிலும் தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளது.
இவ்வாறாக ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களில் அதனை எப்போது தளர்த்துவது என்பது தொடர்பாக இன்னும் தீர்மானிக்கப்படவில்லையெனவும், இதனால் அந்தப் பிரதேசங்களில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்குமென்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.