June 12, 2025 14:43:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வரவு – செலவுத் திட்ட விவாதத்தை செவிப்புலனற்ற நபர்களுக்காக சைகை மொழியிலும் வழங்குவதற்கு அனுமதி

2022 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட விவாதத்தை செவிப்புலனற்ற நபர்களுக்காக சைகை மொழியிலும் வழங்குவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகரின் ஆலோசனைக்கு அமைய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இவ்விடயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டதுடன், இதற்கமைய வரவு – செலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சமாந்தரமாக சைகை மொழிக்கு தனியானதொரு கட்டமொன்றை வழங்குவதற்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், நவம்பர் 9 ஆம் திகதி வியாழக்கிழமை அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) சமர்ப்பித்துள்ள அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார். கடந்த ஜூலை 20ஆம் திகதி, ஒக்டோபர் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கைகளே இவ்வாறு விவாதத்துக்கு உள்ளாக்கப்படவுள்ளன.இந்த சபை ஒத்திவைப்பு விவாதம் முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை நடைபெறவுள்ளது.