சுகாதாரம், பாதுகாப்பு, விமான நிலையம் மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஈடுபடுவோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மூன்றாவது டோஸாக பைசர் தடுப்பூசியை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளை நவம்பர் முதலாம் திகதியிலிருந்து முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று பிற்பகல் கொவிட் தடுப்பு விசேட குழுவுடன் வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது, கல்வி மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஒன்று சேர்ந்து கலந்தாலோசித்து அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவு மற்றும் தரம் 11, 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான இயலுமை தொடர்பாகவும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்குள்ளான புகையிரத போக்குவரத்து சேவை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும். மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படுவதோடு புகையிரத பயணச் சீட்டை பெற்றுக்கொண்டுள்ள பயணிகள் மாத்திரம் முதலாம் கட்டத்தின் கீழ் பயணிக்க அனுமதி வழங்குவதற்கு கொவிட் குழு பரிந்துரை செய்துள்ளது.
இதேவேளை பொதுமக்களின் வேண்டுகோளை கருத்திற்கொண்டு தற்போது நடைமுறைப்படுத்தி வரும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நவம்பர் 01ஆம் திகதி முதல் நீக்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டது.
முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதாரப் பரிந்துரைகளை பின்பற்றுவதற்கு பொதுமக்களை தொடர்ந்து தெளிவுபடுத்தல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக உள்நாட்டு ஔடதங்கள் மற்றும் கஞ்சி வகைகளை அருந்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.