October 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – இந்தியப் பிரதமர் பேச்சுவார்த்தை தாமதமாகலாம்

(கோப்புப் படம்) 2017 மே மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமரை கூட்டமைப்பின் தலைவர்கள் சந்தித்திருந்தனர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தாமதமாகலாம் என்று தெரியவருகின்றது.

கொழும்பிலிருந்து இயங்கும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், “பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எமது கட்சியுடன் பேசுவதில் இந்தியப் பிரதமர் ஆர்வம் காட்டியிருந்தார். எனினும் தற்போதைய (கொவிட்-19) சூழ்நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை இப்போதைக்கு நடைபெறுமா என்பது தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடியே கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்காக அணுகியதாகவும், ஆதலால் இந்திய தரப்பினரே சந்திப்புக்கான காலத்தை ஒழுங்குசெய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

இந்தப் பேச்சுவார்த்தை இணைய தொடர்பாடல் மூலம் நடைபெறுமா அல்லது நேரடி சந்திப்பாக அமையுமா என்பது குறித்தும் இன்னும் உறுதியாகவில்லை.

இலங்கையில் மாகாணசபை நிர்வாக முறை உருவாக காரணமாக இருந்த இந்தியா, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தப் பின்னணியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இந்திய இராஜதந்திர தரப்பினர் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.