February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சுயாதீன ஆணைக்குழுக்களை பலப்படுத்தினால் மட்டுமே சர்வதேசத்தின் அங்கீகாரம் கிடைக்கும்’

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் போது நாட்டின் சுயாதீன ஆணைக்குழுக்களினதும் சுயாதீனத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுவே இலங்கையை சர்வதேச நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றும் என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார். நாம் ஆட்சிக்கு வந்து மீண்டும் சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கினோம்.ஆனால் புதிய அரசாங்கம் மீண்டும் 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்து சகல சுயாதீன ஆணைக்குழுக்களையும் நாசமாக்கி நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது என்று சுட்டிக்காட்டிய அவர்,

நாட்டில் நீதிப் பொறிமுறை, நியாயப்பாடுகள் நாளுக்கு நாள் அழிக்கப்படுகின்றது என்ற எண்ணப்பாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை,ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் உருவாகியுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு மூலமாகவே அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.தனியார் சட்டத்தரணிகளை கொண்டு புதிய அரசியல் அமைப்பை வரைந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது.ஆனால் அவ்வாறு இடம்பெறக்கூடாது.பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இதனை கொண்டுவந்து எம்மிடம் ஆலோசனைகளை கேட்டு உருவாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.