July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாய உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்கப்படும்; அரசாங்கம்

விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு தீர்வு காணவே நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படும் நனோ நைற்றிஜன் உரத்தை இறக்குமதி செய்ய தீர்மானித்ததாகவும், உரத்தின் தரம் குறித்த பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதுடன், உற்பத்தியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பையும் ஏற்றுக் கொள்வோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அரசாங்க தரப்பினர் இதனை கூறியுள்ளனர்,

சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களை நாம் எக்காரணம் கொண்டும் நெருக்கடிக்குள் தள்ளவில்லை. அவர்களின் ஒத்துழைப்பே அதிகளவில் கிடைக்கின்றது. ஆனால் இவர்களுக்கான பிரச்சினை இன்று நேற்று உருவான ஒன்றல்ல.

கடந்த ஆட்சிக் காலத்தில் நெல் பெற்றுக் கொள்ள கடன் பெற்றுக் கொண்டு, ஆனால் அவற்றை சந்தைக்கு வழங்க முடியாது போனமையே இந்த கடன்களுக்கு காரணமாகும். ஆகவே இந்த கடன்களை நீக்கி அவர்களை பலப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நெல் ஒரு கிலோவிற்கு விவசாயிக்கு சிறந்த விலை கிடைக்கின்றது. ஆகவே விவசாயிகள் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர். 30 ரூபாவிற்கு ஒரு கிலோ நெல் வாங்கிய சூழ்நிலையில் இப்போது 70 ரூபா அளவில் பெற்றுக் கொள்ளப்படுகின்றது.

அதேபோல் உரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பது உண்மையே.ஆனால் அதற்கும் தீர்வுகளை நாம் வழங்கி வருகின்றோம்.நாம் இறக்குமதி செய்துள்ள நைற்றிஜன் உரம் தரத்தில் கூடியது.இது உலகத்தின் புதிய தொழிநுட்ப உரமாகும்.நனோ நைற்றிஜன் உரம் முழுமையாக இறக்குமதி செய்யப்படும். 30 ஆம் திகதிக்கு முன்னர் விவசாயிகளுக்காக இந்த உரங்கள் இறக்குமதி செய்யப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்திருந்தார்.