“யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 39 பேர் இரவிரவாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“வடக்கில் இறுதிக்கட்டப் போர் நடந்த கடந்த 2009 ஆம் ஆண்டு பல சிறுவர்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். குறிப்பாக 18.05.2009 ஆம் ஆண்டில் முன்னாள் போராளிகளின் பிள்ளைகள் இவ்வாறு இராணுவத்திடம் தாய், தந்தையுடன் ஒப்படைக்கப்பட்டனர்.
இக்காலகட்டத்தில் நான் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றினேன்.அப்போது என்னிடம் கல்வி கற்ற மாணவர்கள் கூட இந்தப் பட்டியலில் உள்ளனர். அவர்கள் அப்போது 6 ஆம், 7ஆம் தரங்களில் கல்வி கற்றனர்.
இவ்வாறு உயிருடன் இராணுவத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? இவ்வளவு காலமும் இதற்கான நீதி இந்த மண்ணிலே கிடைக்கவில்லை.
ஒவ்வொரு தடவையும் ஜெனிவாவில் பிரேரணை வருகின்ற வேளையில், ஜெனிவாவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகின்ற வேளையில் மட்டுமே இந்த விடயங்கள் பேசு பொருளாகின்றன.
குடும்பம் குடும்பமாக இவர்கள் சரணடைந்தனர்.அதற்கான சாட்சிகள், ஆதாரங்கள் உள்ளன.ஆனால், இன்னமும் நீதி கிடைக்கவில்லை.
நாட்டில் சட்டங்கள் குறித்து பேசுகின்றோம். நீதிப் பொறிமுறை பற்றி பேசுகின்றோம்.சிறுவர்களின் உரிமைகள் குறித்து பேசுகின்றோம்.ஆனால், இன்றும் 17 பெண்கள் குழந்தைகளுடன் சிறைகளில் உள்ளனர்.அவர்களின் பிள்ளைகளைக் கூடப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த உயரிய சபையில் நியாயம், சட்டம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.ஆனால், கைது செய்யப்பட்ட நபர்களைச் சென்று பார்க்க முடியாத நிலைதான் உள்ளது.
திருகோணமலையில் சிறுவன் ஒருவன் தன்னுடைய முகநூலில் பதிவிட்ட புகைப்படம் காரணமாக அவன் கைது செய்யப்பட்டு இன்றும் சிறையில் உள்ளான்.இவ்வாறு பல குடும்பங்கள் கண்ணீருடன் உள்ளன.
இந்தக் கொரோனா காலத்தில் கடந்த மூன்று மாதங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 39 பேர் இரவிரவாக கைது செய்யப்பட்டுள்ளனர்.விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு மற்றும் கிளிநொச்சியில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் தமது பிள்ளைகளுக்காக,உறவினர்களுக்காக, மாவீரர்களுக்காக தமது எண்ணங்களை, கண்ணீரை கற்பூரமாகவோ மெழுகுவர்த்தியாகவோ ஏற்றி வணங்க முடியாத நிலையில் இந்த நாட்டின் சட்டம் செயற்படுகின்றது.
தமிழர்கள் இந்த நாட்டில் எந்த நிலைமையில் உள்ளனர் என்பதை சர்வதேசம் விளங்கிக் கொள்ள வேண்டும். உயிரோடு ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு நீதி கிடைக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களின் முழு பெயர் விபரங்களையும் சிறிதரன் எம்.பி. சபையில் ஆவணப்படுத்தினார்.