July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகள் வெற்றிலை சின்னத்தில் களமிறங்க ஆராய்வு

அரசாங்கத்திற்குள் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் உக்கிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைந்து களமிறங்குவது குறித்தும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் வெற்றிலை சின்னத்தை பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.

அரசாங்கத்திற்குள் எழுந்துள்ள முரண்பாடுகளை அடுத்து ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகள் தொடர்ச்சியாக கூடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு அரசாங்கத்தின் தீர்மானங்கள், நெருக்கடிகள் குறித்து ஆராய்ந்து வருகின்ற நிலையில், தற்போது மாகாண சபை தேர்தல் குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.ஜனாதிபதியுடன் பங்காளிக் கட்சிகள் கேட்டுக் கொண்ட சந்திப்பு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் பங்காளிக் கட்சிகள் சில மாற்று தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக தெரிய வருகின்றது.

குறிப்பாக மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையில் அவர்களின் அரசியல் பின்புலத்தை வைத்துக் கொண்டு ஏனைய பங்காளிக்கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியாக களமிறங்கிப் பார்க்கலாம் என்ற யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிலை சின்னத்தில் மீண்டும் களமின்றங்கி தமது பலத்தை நிரூபிக்கவும், அரசாங்கத்துடன் பேரம் பேசும் தீர்மானமிகு அணியாக தம்மை மாற்றிக்கொள்ள முடியும் என்ற கருத்துக்கள் பங்காளிக் கட்சிகளின் சந்திப்புகளில் ஆராயப்பட்டுள்ளது.