உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதையடுத்து இலங்கையில் அதற்கேற்ப விலை அதிகரிக்கப்படாததால் ஒக்டோபர் மாதம் நிறைவடையும்போது ஆயிரம் கோடி ரூபா நட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் நாட்டில் இதுவரை எரிபொருள் விலை அதிகரிக்கப்படாததால் கூட்டுத்தாபனம் தற்போது 7 ஆயிரம் கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் தெரிவிக்கையில்;
“உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதையடுத்து நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படாததால் விற்பனை செய்யப்படும் டீசல் ஒரு லீற்றருக்கு 30 ரூபாவும், பெற்றோல் ஒரு லீற்றருக்கு 20 ரூபாவும் நட்டம் ஏற்படுகின்றது.
அந்தநிலையில், தற்போது கூட்டுத்தாபனத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.அதில் 4 ஆயிரம் கோடி ரூபா உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளது. அத்துடன் 3 ஆயிரம் கோடி ரூபா நட்டம் ரூபாவின் பெறுமதி குறைவடைந்ததன் காரணமாக ஏற்பட்டுள்ளது.
உலக சந்தையில் தற்போது மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 80 அமெரிக்க டொலராகவும்,சுத்திகரிக்கப்பட்ட டீசல் பீப்பா ஒன்றின் விலை 97 அமெரிக்க டொலராகவும் உள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல் பீப்பா 96 டொலராக உயர்வடைந்துள்ளது.அதற்கிணங்க எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு பல தடவைகள் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் அரசு அதற்கான தீர்மானத்தை இதுவரை மேற்கொள்ளவில்லை.
அதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மக்கள் வங்கி, இலங்கை வங்கி ஆகிய வங்கிகளில் 3 ஆயிரத்து 600 கோடி ரூபாவைக் கடனாக பெற்றுக் கொண்டுள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் கொள்வனவின் போது பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.