
யாழ்.மாநகர சபையின் செயற்பாடுகள் அனைத்தும் விரைவில் கணினி மயப்படுத்தப்படும் என யாழ்.மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ்.மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது நாம் கணினி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.அந்த வகையிலேயே யாழ்.மாநகர சபையின் செயற்பாடுகளை முற்றுமுழுதாக இணையவழி மூலம் கணினி மயப்படுத்தப்பட வேண்டும் என்பது என்னுடைய இலக்கு.அந்த இலக்கை நோக்கிய பயணத்தின் மிக காத்திரமான பணியின் ஒரு பகுதியை இன்று நாங்கள் அடைந்துள்ளோம்.
அத்துடன் எதிர்காலத்தில் யாழ்.மாநகர சபையின் செயற்பாடுகள் அனைத்தும் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டு இணையத்தின் ஊடாக பொதுமக்கள் தமது சேவையினை வீட்டில் இருந்தே பெற்றுக் கொள்ளக் கூடியவாறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.அதற்குரிய வேலைத் திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இணையத்தளமானது பொது மக்கள் தமக்குரிய சேவையினை வீடுகளில் இருந்தவாறே இணையத்தினூடாக தமக்குரிய முழுமையான சேவைகளைப் பெற்றுக்கொள்ள கூடியவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே எமது பதவிக் காலம் விரைவில் முடிந்து விட்டாலும் எதிர்வரும் காலத்தில் இந்த மாநகர சபையினை பொறுப்பேற்கும் நிர்வாகமானது முழுமையாக இணைய மயமாக்கப்பட்ட மாநகர சபையாக பொறுப்பேற்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.