July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வேறு திரிபுகளுடன் வைரஸ் வீரியத்தை அதிகரித்துக் கொண்டு பரவும் சாத்தியப்பாடு’

நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்துள்ள போதிலும் நாடு இன்னமும் கொவிட் வைரஸ் பரவல் நிலைமையில் இருந்து விடுபடவில்லை.எனவே சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது மக்களின் அனாவசிய செயற்பாடுகள் தொடருமானால், மக்களின் செயற்பாடுகள் காரணமாக மீண்டும் வைரஸ் தொற்று பரவினால் நாட்டை முடக்குவதை தவிர மாற்று தெரிவு வேறு எதுவுமே இருக்காது என சுகாதார பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

வைரஸானது வேறு திரிபுகளுடன் வீரியத்தை அதிகரித்துக் கொண்டு பரவும் சாத்தியம் இன்னமும் இருப்பதாக சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளர் ஆகியோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொவிட் வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து சுகாதார பணியகம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றது. விசேட வைத்திய நிபுணர்கள், ஆய்வாளர்கள், சர்வதேச ஆய்வாளர்கள் மற்றும் சகல தரப்பினரதும் தரவுகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் இலங்கையில் இன்னமும் வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்பாட்டில் வரவில்லை.

வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்பதற்காக நாம் சவால்களில் இருந்து விடுபட்டு விட்டோம் என எவரும் நினைக்க வேண்டாம் என சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தொடர்ந்தும் கொவிட் வைரஸ் தாக்கத்திற்கான அச்சுறுத்தல் நிலைமை உள்ளது. அதுமட்டுமல்ல இலங்கையில் டெல்டா வைரஸ் பரவிக்கொண்டிருந்த நிலையிலேயே நாடு திறக்கப்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான சூழ்நிலை அல்ல. மாகாணங்களுக்கு இடையில் இன்னமும் பயணத்தடை நீக்கப்படவில்லை. ஆனால் விடுமுறை நாட்களில் மக்கள் ,மாகாணங்களை கடந்து பயணிப்பதை அதிகளவில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.