October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தமிழ்த் தேசியம் என்பது தடம் மாறலாம் ஆனால் தடம்புரளக் கூடாது”

தமிழ்த் தேசியம் என்பது தடம் மாறலாம் ஆனால் ஒருபோதும் தடம்புரளக் கூடாது. இதுதான் யதார்த்தம்.1983 இற்கு முதல் அகிம்சை வழி போராட்டத்தில் தமிழ்த் தேசியம் ஆயுதம் தூக்காத போராட்டமாக இருந்திருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

‘ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக “ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை புனரமைக்கும் வேலைத் திட்டத்தினூடாக ஆயித்தியமலை மணிபுரம் தணிகாசலம் வீதியினை கொங்கிறீட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தி கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துகின்ற அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற உரிமை சார்ந்த விடயங்களில் நாங்கள் சாணக்கியமாக,ராஜதந்திரமாக நகர்ந்து செல்கின்ற அதேவேளை, அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.

எமது தமிழ் தலைமைகளால் பிரச்சினையை மாத்திரம் தான் சொல்ல முடியும்.72 வருடங்கள் அல்ல, 700 வருடங்கள் சென்றாலும் எமது மக்களுக்கான பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க இவர்களால் முடியாது.ஆண்டாண்டு காலமாக அதே பொய்,அதே பித்தலாட்டம்.எனக்கு வாக்களித்த அந்த 34 ஆயிரம் மக்களால் தான் இந்த மாகாணத்திற்கு, இந்த மாவட்டத்திற்கு ஒட்டுமொத்த மக்களுக்கும் இன்று நல்லது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.அந்த 34 ஆயிரம் பேரையும் என்னால் மறக்க முடியாது.

தமிழ்த் தேசியம் என்பது தடம் மாறலாம்,ஆனால் தமிழ்த் தேசியம் தடம்புரளக் கூடாது. இதுதான் யதார்த்தம்.1983 இற்கு முதல் அகிம்சை வழி போராட்டம்.அதுதான் தமிழ் தேசியம். 1983 ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு ஆயுதம் தூக்கிப் போராடினார்கள். அகிம்சையில் இருந்து ஆயுதப்போராட்டம்.2009 மே மாதத்திற்கு பிறகு ஜனநாயக மயப்படுத்தப்பட்ட போராட்டமாக மாறியது.வரலாற்றில் தமிழ் தேசியம் தடம்மாறி வந்திருக்கின்றது.ஆனால் தடம்புரள கூடாது.காலம், சூழ்நிலைக்கேற்றவாறு நாம் சிந்திக்க வேண்டும்.

விடிய விடிய போராடினாலும் அம்பாறையில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொள்ள முடியாது இன்று முஸ்லிம் சமூகம் அங்கு நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கின்றார்கள்.அதேபோல் விடிய விடிய முயற்சித்தாலும் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை மாத்திரமே திருகோணமலையில் எம்மால் பெற்றுக்கெள்ள முடியும்.அதேபோன்று இன்னும் பத்து வருடங்களின் பின்பு அந்த ஒருவர் கூட வர முடியுமா என்று சந்தேகமே.எங்கே போய்க்கொண்டிருக்கிறது இந்த மாகாணம்.நான் இனவாதம் பேசவில்லை.என் சார்ந்த சமூகத்தின் நிலைமை தொடர்பிலேயே பேசிக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.