July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் வீதியில் சென்றவர்களிடம் நகைகளை பறித்து சென்ற நால்வர் பொலிஸாரால் கைது

யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்றவர்களின் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற நால்வர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை, அச்சுவேலி, சுன்னாகம் உட்பட 5 இடங்களில் வீதியில் பயணித்தவர்களிடம் தங்க நகைகளை அறுத்து அபகரித்துச் சென்ற தெல்லிப்பழை மற்றும் ஏழாலையைச் சேர்ந்த 20-25 வயதுடைய நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து நகைகளை கொள்வனவு செய்த சுன்னாகத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் 6 தங்கப் பவுண் எடையுடைய 5 சங்கிலிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழிப்பறிக்குப் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவில் கடந்த 16 ஆம் திகதி வீதியில் சென்ற பெண் ஒருவரிடம் தங்கச் சங்கிலி அறுத்து அபகரிக்கப்பட்டது.மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த வழிப்பறியில் ஈடுபட்டிருந்தனர்.

அன்றைய தினம் இளவாலை மற்றும் சுன்னாகம் பகுதிகளிலும் வீதியில் சென்ற இருவேறு நபர்களிடம் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டன.

சம்பவங்கள் தொடர்பில் அச்சுவேலி, சுன்னாகம் மற்றும் இளவாலை பொலிஸ் நிலையங்களில் வழங்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண பிராந்தியத்துக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மூன்று வழிப்பறிச் சம்பவங்களுடன் வட்டுக்கோட்டையில் ஒருவரிடமும் மருதனார்மடத்தில் வியாபாரி ஒருவரிடமும் தங்க நகைகள் அபகரித்தமையை சந்தேக நபர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்.

வழிப்பறியில் கொள்ளையிட்ட நகைகளை சுன்னாகத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் சந்தேக நபர்கள் விற்பனை செய்திருந்தனர்.அதனால் நகைக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேக நபர்கள் வழங்கிய 5 சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.