
பாரத தேசம் இந்த உலகிற்குத் தந்த மிகப் புனிதமான நூலான பகவத்கீதையின் சிங்கள மொழிபெயர்ப்பின் முதற்பிரதியை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்திய பிரதமருக்குப் கையளித்துள்ளார்.
குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்க இந்தியா சென்ற நாமல் ராஜபக்ஷ, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே 2500 வருடங்களாகக் காணப்படும் நட்புறவின் அடையாளமாக, புனித நூலான பகவத்கீதையை இலங்கை சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுக்கு மொழிபெயர்த்துள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, புத்தசாசன சமய, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பகவத்கீதை எனும் இந்நூல் பதிப்பிக்கப்பட்டது.
இலங்கையில் வாழும் அனைத்து மதத்தவர்களும் அறியும் வகையில் பகவத்கீதையில் அமைந்த சமஸ்கிருத சுலோகங்களை, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அறியும் வண்ணம் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.