இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் மஹாசங்கத்தினர் இன்று (20) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
புத்தபிரான் மகாபரிநிர்வானா அடைந்த இடத்தைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச யாத்திரிகர்களுக்கு வசதியாக இது அமைவதுடன், உலகெங்கும் உள்ள புத்தரின் யாத்திரைத் தலங்களை இணைக்கும் வகையிலும் செயல்படும்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில் முதலாவது விமானம் இலங்கையிலிருந்து வருகை தருமாயின் அது குறித்து பெரும் மகிழ்ச்சியடைவதாக இந்திய பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்படுவதை குறிக்கும் வகையில் இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்றுள்ள ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானம் முதலாவதாக அங்கு தரையிறக்கப்படவுள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் எண்ணக்கருவிற்கமைய அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் நூறு பேர் பயணமாகியுள்ளனர்.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பதிரகே உள்ளிட்ட தூதுவர்கள் இவ்விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.