யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ வுடன் பேச்சுவார்த்தை நடத்துவதா, இல்லையா? தமது அடுத்த நகர்வு என்ன என்பது குறித்து ஆராய எதிர்வரும் சனிக்கிழமை 23 ஆம் திகதி மீண்டும் பங்காளிக் கட்சிகள் கூடி தீர்மானிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதியின் பதில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாகவும் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யுகதனவி மின்சார உற்பத்தி நிலைய உடன்படிக்கை குறித்து ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகள் இடையே கடும் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றென கூறி இதற்கான காரணத்தையும் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், யுகதனவி மின்சார நிலைய உடன்படிக்கை குறித்து கலந்துரையாடவும் தமது தரப்பு காரணிகளை முன்வைக்கவும் வேண்டும் என ஆளுந்தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 பங்காளிக்கட்சிகள் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்த போதிலும், இந்த விடயங்கள் குறித்து பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் கலந்துரையாடி தீர்வு காணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பங்காளிக் கட்சிகளிடத்தில் தெரிவித்திருந்தார்.
பங்காளிக் கட்சிகள் இந்த பதிலை ஜனாதிபதியிடம் எதிர்பார்த்திருக்காத நிலையில், அடுத்த கட்டத்தில் என்ன செய்வது என்பது குறித்து பங்காளிக் கட்சிகள் இடையே குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே அடுத்ததாக தாம் என்ன செய்வது என்பது குறித்து ஆராயும் விதமாக எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை மீண்டும் சகல பங்காளிக் கட்சிகளும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளன.