January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”எமது போராட்டத்தை இந்தியாவுக்கு எதிரானதாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர்”: சுமந்திரன்

முறையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரியே நாங்கள் கடலில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம் என்றும், ஆனால் சிலர் இதனை இந்தியாவுக்கு எதிரானதாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் 2016 ஆம் ஆண்டு தடை செய்யப்படவேண்டிய தொழில்முறை என உத்தியோகபூர்வமாக கூட்டறிக்கையில் அறிவித்திருந்த தொழில் முறையை முன்னெடுப்பது சட்ட விரோதமாகும். இதன்படியே எமது போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இதனை இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு என்று வேண்டுமென்றே ஒரு கதையினை கட்டி இந்த மீனவர்களுடைய போராட்டத்தினை வலுவிழக்கச் செய்கின்ற செயற்பாட்டில் சிலர் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் அதை முற்றாக நிராகரிக்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொழிலை யார் செய்தாலும் தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கை. இந்த சட்டத்தில் இருக்கின்ற படியால் அந்த சட்டத்தை அமுல்படுத்துமாறு தான் கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார்.