January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கோரிக்கை

மாகாணசபைகள் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தாம் முன்வைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முன்னைய ஆட்சியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த தான் முயற்சிகளை எடுத்தும் ஏனையவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டின் நிகழ்கால அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகள் குறித்து தம்மால் திருப்தியடைய முடியாதுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்கள் தமது அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மீனவர்கள் தமக்கான நியாயம் கேட்டு போராடுகின்றனர். விவசாயிகள் உரம் தருமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மரக்கறி உற்பத்தியாளர்கள் தமது விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லையென கவலைப்படுகின்றனர்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமக்கான கொடுப்பனவுகள் வேண்டுமென கேட்டு நிற்கின்றனர். மக்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அரசாங்கம் இது குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும். நாமும் ஆளும் கட்சிக்குள் இருக்கும் முக்கிய பங்காளிக் கட்சியாக அரசாங்கத்திற்கு நிலைமைகளை எடுத்துக்கூறி வருகின்றோம்”

என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.