
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டமொன்றை அரசாங்கம் தயாரித்துள்ளது.
திருகோணமலை துறைமுகத்தை வங்காள விரிகுடாவின் பிரதான துறைமுகமாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த திட்டத்தின் கீழ் திருகோணமலை துறைமுகத்திற்கு அண்மையில் உள்ள துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான 2000 ஹெக்டயார் காணிப் பகுதியை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவையில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
பங்களாதேஷ், இந்தியாவின் கிழக்குக் கரையோரப் பிரதேசம், மியன்மார் மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் துரித பொருளாதார வளர்ச்சியால் வங்காள விரிகுடா சார்ந்த வலயங்களை மையமாகக்கொண்ட துறைமுகங்களை விருத்தி செய்வதற்காக திருகோணமலை துறைமுகத்தின் அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தை தயாரிக்கும் போது திருகோணமலை துறைமுகத்தின் இயற்கையான அமைப்பு, குறித்த துறைமுகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான 2000 ஹெக்டயார் காணி மற்றும் துறைமுக சேவைகளை வழங்குவதற்காக நிலவுகின்ற முன்னேற்றகரமான உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் துறைமுகத்தை விருத்தி செய்வதற்காக விசேட வரையறைகள் இல்லாமல் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பது பொருத்தமானது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, துறைமுகம் சார்ந்த கனரகப் பொறியியல் தொழிலகத்தை ஆரம்பிப்பதற்கு ஆர்வம் காட்டும் முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கில், தற்போது காணப்படும் ஒரு துறைமுகத்திற்கு ஒரு உலோகத் தொழிற்சாலை எனும் கொள்கையை திருத்தம் செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.