July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முஹம்மத் நபி பிறந்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் ‘மீலாதுன் நபி’ வாழ்த்துச் செய்தி

முஸ்லிம்களின் இறைத் தூதரான முஹம்மத் நபியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ‘மீலாதுன் நபி’ வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

இஸ்லாமிய போதனைகளின்படி, காலத்திற்கு காலம் இறைவனால் அனுப்பப்பட்ட இறை தூதர்களில் இறுதி தூதராக முஹம்மது நபி கருதப்படுகிறார். அவரது பிறந்த தினமே இன்று கொண்டாடப்படுகிறது.

அனைவரதும் நம்பிக்கைக்குரியவராக மாற வேண்டுமெனில், கருணை மற்றும் நேர்மை என்பன அவசியமென்று உலகுக்கு சுட்டிக்காட்டிய முஹம்மத் நபியின் பிறந்தநாளே இன்று கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

இறைவன் நேர்மையுள்ள மனிதர்களுக்கு கருணை காட்டுவதோடு, அவ்வாறான மனிதர்களுக்குத் தகுதியான உயர் அந்தஸ்த்து வழங்கப்படுவதை முஹம்மத் நபியின் முன்மாதிரிகளை கற்கும்போது விளங்கிக்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை உட்பட உலகவாழ் அனைத்து முஸ்லிம்களினதும் கௌரவத்துக்குரிய முஹம்மத் நபியின் வழிகாட்டல்களை சமூகமயப்படுத்தி ஒற்றுமையை உருவாக்குவதே முஸ்லிம்கள் நபியவர்களுக்கு கொடுக்கக்கூடிய விசேட கௌரவமாகும் என்று கோட்டாபய ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

முஹம்மது நபி நாயகம் அக்காலத்தில் காணப்பட்ட சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை அறிவார்ந்த புரட்சியால் இல்லாதொழித்து சமத்துவத்திற்காக உழைத்ததாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உலக வாழ் மக்கள் அனைவருக்கும் நல்வழி காட்டுவதே இறைத் தூதரான முஹம்மத் நபியின் போதனைகளின் சாராம்சமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.