புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்புக்காக ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட குழுவினர், அதன் வரைபை தயாரிக்கும் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி புதிய அரசியலமைப்புக்கான வரைபு தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஜனாதிபதி வாக்குறுதியளித்தவாறு புதிய அரசியலமைப்புக்கான பணிகள் இடம்பெற்று வருகின்றது எனவும், இதற்கமை வரைபை சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்த பின்னர் அதனை இறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி 2022 ஜனவரி மாதமளவில் புதிய அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் சமர்பிக்க முடியுமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கூடிய விரைவில் புதிய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறை மாற்றம் என்பனவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.